கோலாலம்பூர், டிசம்பர்.06-
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று மலாக்கா ஜசெக தெரிவித்துள்ளது.
கொள்ளையர்களான அந்த மூன்று இளைஞர்களும் போலீஸ்காரர்களைப் பாராங்கினால் தாக்க வந்ததாக அரச மலேசியப் போலீஸ் படை தொடக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்த போதிலும், அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் உண்மையிலே என்ன நடந்தது என்பதை அறிய முற்படும் போது ஒரு வகையான பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று மலாக்கா மாநில ஜசெக சட்டப் பிரிவுத் தலைவர் மதன் அனந்தரன் தெரிவித்தார்.
உண்மையிலேயே பலவந்தம் இருந்தால் மட்டுமே துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கு சட்டங்கள் அனுமதிக்கின்றன. ஆனால் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நடந்த விவகாரம் முற்றிலும் மாறுப்பட்டுள்ளது.
எனவே நீதி நிலைநாட்டப்படுவதற்குச் சுயேட்சை விசாரணை அவசியமாகிறது. அதே வேளையில் நீதித்துறை மீது நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இது போன்ற சுயேட்சை விசாரணை முக்கியமாகும் என்று மதன் அனந்தரன் வலியுறுத்தியுள்ளார்.








