கோலாலம்பூர், நவம்பர்.28-
மலேசியாவில் நேற்று நள்ளிரவு முதல் பல மாநிலங்களைத் தாக்கிய சென்யார் வெப்பமண்டலப் புயலில், மலாக்காவில் அதிகாலையில் நிகழ்ந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மரங்கள் சாய்ந்தது மற்றும் கட்டமைப்புகள் சரிந்து விழுந்தது தொடர்பில் 49 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
மலாக்கா நீரிணையில் உருவான சென்யார் வெப்பமண்டல புயலால் நிகழ்ந்த மரணம், நேரடியாக ஏற்படவில்லை என்றாலும், புயலால் வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்த மரத்தில் மோதி மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு, மீட்புத் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.
போர்ட்டிக்சனில் உள்ள பெட்ரோல், டீசல் படகுத்துறையில் எட்டு தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு கட்டமைப்பு சரிந்து விழுந்த சம்பவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இதுவரை, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் புயலின் பாதிப்பு அதிகமாகப் பதிவாகியுள்ளது. இம்மாநிலத்தில் மரங்கள் விழுந்தது உட்பட 33 சம்பவங்கள் பதிவு செயய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு நிலச்சரிவு சம்பவம், ஒரு கட்டமைப்பு இடிந்து விழுந்தது மற்றும் இரண்டு வெள்ளப் பெருக்குச் சம்பவங்களும் அடங்கும்.
சென்யார் புயல் கரையை கடந்த போது பலவீனமடைந்திருந்தாலும், தொடர்ச்சியாக நீடித்து வரும் கன மழையால் பூமியின் நிலப்பகுதியில் அதிக ஈரப்பதம் ஏற்பட்டு, வலுவிழந்துள்ளது. இதன் காரணமாக மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்து இருக்கலாம் என்று டத்தோ நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு அப்பாற்பட்டு, சிலாங்கூரில் ஐந்து சம்பவங்களும், புத்ராஜெயாவில் இரண்டு சம்பவங்களும், பேராவில் ஒரு சம்பவமும் பதிவாகியுள்ளன. கோலாலம்பூரில் எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என்று மலாக்கா ஆயர் குரோவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ நோர் ஹிஷாம் இதனைத் தெரிவித்தார்.
சென்யார் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்பு, மீட்புப்படையினர் விழிப்பாக, தயார் நிலையில் இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.








