மலாக்கா, அக்டோபர்.12-
அலோர் காஜாவில் உள்ள ஒரு பள்ளியில் பதின்ம வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட படிவம் 5 பயிலும் நான்கு மாணவர்கள், வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் எஸ்பிஎம் பொதுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் அறிவித்துள்ளார்.
சட்டம் தன் கடமையைச் செய்யும் அதே வேளையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதே இந்த முடிவின் நோக்கம் என்றும், சட்ட நடவடிக்கைக்காக இவ்வழக்கு முழுமையாகக் காவற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவருக்குத் தேவையான உளவியல் ஆதரவையும் மருத்துவக் குழு வழங்கி வருகிறது.
மேலும், இந்தப் பரபரப்பான சம்பவம் காரணமாக பாதிக்கப்படாமல் இருக்க, தேர்வு எழுதும் மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான உளவியல் ஆதரவை வழங்கவும் கல்வி அமைச்சு சிறப்பு கவனம் செலுத்துகிறது என ஃபட்லீனா மேலும் கூறினார்.








