புத்ராஜெயா, அக்டோபர்.06-
நாட்டில் அதிகரித்து வரும் பகடிவதைச் சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அடித்தளமிடும் என்று எதிர்பார்க்கப்படும் பகடிவதை எதிர்ப்புச் சட்ட மசோதா, வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்தார்.
இந்த உத்தேசச் சட்ட மசோதா மீதான நகல் தற்போது வரையப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் அதே வேளையில் வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதங்களுக்காக மக்களைவில் தாக்கல் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
பகடிவதை தொடர்பில் நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட டவுன் ஹால் கூட்டங்களில் மக்கள் முன் வைத்துள்ள பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக அஸாலினா தெரிவித்தார்.








