Nov 25, 2025
Thisaigal NewsYouTube
பேரா மாநில அரசு ஊழியர்கள் சிறப்பு நிதி உதவியாக இரண்டு மாதச் சம்பளத்தைப் பெறுவர்
தற்போதைய செய்திகள்

பேரா மாநில அரசு ஊழியர்கள் சிறப்பு நிதி உதவியாக இரண்டு மாதச் சம்பளத்தைப் பெறுவர்

Share:

ஈப்போ, நவம்பர்.25-

பேரா மாநில அரசு ஊழியர்கள் சிறப்பு நிதி உதவியாக இரண்டு மாதச் சம்பளத்தைப் பெறுவர் என மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சரானி முகமட் அறிவித்துள்ளார்.

இந்தச் சிறப்பு நிதி உதவியை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் அதிகாரிகள், மாநிலத்தினால் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்கள், Orang Besar Jajahan, கிராமத் தலைவர்கள், குறுகிய கால ஒப்பந்த தொழிலாளகள் முதலியோர் பெறுவர் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

இன்று பேரா மாநில சட்டமன்றத்தில் மாநிலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான 1.61 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில் சரானி முகமட் இதனைத் தெரிவித்தார்.

பேரா மாநில அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த சிறப்பு நிதி உதவி வழங்கப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் இந்த நிதி உதவி அவர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மந்திரி பெசார் தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவரித்த மனித வளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரம் மற்றும் ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன், மக்கள் நல்வாழ்வு, மாநில நலன் திட்டங்களின் நிர்வாகம், மனித மூலதனம், இளைஞர் மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உணவு விநியோக பாதுகாப்பு ஆகிய ஐந்து முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தி, "வளமான பேராக், வளமான மக்கள்" என்ற கருப்பொருளின் கீழ் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதில் தமிழ்ப்பள்ளிகள், இந்திய கிராமத் தலைவர்களுக்கான 100 ரிங்கிட் சம்பள உயர்வு, சகாய நிதி, மாணவர்களுக்கான உபகாரச் சம்பளம், அவசர நிதி, சமூக நல உதவித் திட்டங்கள் முதலியவை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவநேசன் விவரித்தார்.

தொழில்திறன் பயிற்சிக்கு இந்த முறை கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு 7 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை நமது இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற டத்தோ சிவநேசன் கேட்டுக் கொண்டார்.

Related News