சரவாக் மாநிலம் லோங் லெல்லாங் பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 5 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய மருத்துவ சங்கமான எம்எம்எ வலியுறுத்தியுள்ளது.

இந்த விபத்தில் விமானி கேப்டன் ஸைனோல் ஆஃபிக், மருத்துவர் டாக்டர் ஐனுல் ஃபாரா, உதவி மருத்துவ அதிகாரி அலேக்ஸ்சன், செவிலியர்கள் டெப்ரா மற்றும் ஜெஸ்ஸி ஆகியோர் உயிரிழந்தனர்.
தொலைதூரப் பகுதிகளுக்கு மருத்துவச் சேவையை வழங்கச் சென்ற போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளதாக எம்எம்எ தெரிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் மருத்துவ விமானங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தொடர்பான விபத்துகள் தொடர்ந்து நிகழ்வது கவலைக்குரியது என்றும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து எம்எம்எ தேசியத் தலைவர் டாக்டர் ஆர். திருநாவுக்கரசு, மருத்துவப் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் படகுகள் சுயாதீன பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், லோங் லெல்லாங் சோகம் மீண்டும் நிகழக்கூடாது என்றும் இது ஒரு மாற்றத்திற்கான தொடக்கப் புள்ளியாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தேசிய மருத்துவச் சங்க மாநாடு 2026 ஈப்போ நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டுடன் எம்எம்எவின் 66-ஆவது ஆண்டு பொதுக்கூட்டமும் இணைந்து நடத்தப்பட்டது.
“சிறப்பான மருத்துவ நடைமுறை: மீள்திறன், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாநாட்டில், மருத்துவத் துறையில் எதிர்கொள்ளப்படும் சவால்கள், மருத்துவ ஆராய்ச்சியின் முக்கியத்துவம், துறையின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்திற்கான புதிய அணுகுமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாநாட்டை பேரா மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஃபெய்சுல் இட்ஸ்வான் பின் முஸ்தஃபா தொடங்கி வைத்தார்.








