May 5, 2026
Thisaigal NewsYouTube
 "சிறப்பாக கடமையாற்றி வரும் அஸாம் பாக்கியை எதற்காக பதவி நீக்கம் செய்ய வேண்டும்?" - அன்வார் கேள்வி
தற்போதைய செய்திகள்

"சிறப்பாக கடமையாற்றி வரும் அஸாம் பாக்கியை எதற்காக பதவி நீக்கம் செய்ய வேண்டும்?" - அன்வார் கேள்வி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.12-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார்.

அவர் தனது கடமையை சிறப்பாக செய்து வரும் நிலையில், அவரை எதற்காகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அன்வார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதிச் சேவை நிறுவனமான Velocity Capital Bhd-இல் அவருக்கு 17.7 மில்லியன் பங்குகள் இருப்பதாக வெளியான புளூம்பெர்க் செய்தியையடுத்து, ரஃபிஸி ரம்லி உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அஸாம் பாக்கியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அஸாம் பாக்கி வெளியிட்டுள்ள அறிக்கையை அனைத்துத் தரப்பினரும் முறையாக வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அஸாம் பாக்கிக்கு எதிரான அது போன்ற விமர்சனங்கள் ஆரோக்கியமானது அல்ல என்றும் அன்வார் சாடியுள்ளார்.

இதனிடையே, சந்தையில் தற்போது தனக்கு எந்தப் பங்குகளும் இல்லை என்றும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதியே இது குறித்து புளூம்பெர்க்கிற்கு விளக்கம் அளித்து விட்டதாகவும் அஸாம் பாக்கி விளக்கமளித்துள்ளார்.

எஸ்பிஆர்எம் அமைப்பின் நற்பெயரைக் கெடுத்ததற்காக நாளை அந்த நிறுவனத்திற்குச் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்படும் என்று அஸாம் பாக்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Related News