Dec 4, 2025
Thisaigal NewsYouTube
6 வயது சிறுவன் கொலை: தந்தைக்கு மேலும் ஒரு வாரத்திற்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

6 வயது சிறுவன் கொலை: தந்தைக்கு மேலும் ஒரு வாரத்திற்குத் தடுப்புக் காவல்

Share:

ரொம்பின், ஆகஸ்ட்.01-

6 வயது சிறுவன் திஷாந்த் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறுவனின் 36 வயது தந்தையை மேலும் ஒரு வாரத்திற்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கு நெகிரி செம்பிலான், பஹாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

அந்த நபரை வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து இருப்பதாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிஷாம் முஸ்தபார் தெரிவித்தார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக நோர்ஹிஷாம் குறிப்பிட்டார்.

அந்த நபர் இன்று காலை 8.50 மணிக்கு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டதையும் அவர் உறுதிபடுத்தினார்.

தனது மகனைக் கொன்றுப் புதைத்து விட்டு, காணாமல் போனதாக நாடகமாடியதாக நம்பப்படும் அந்ந நபர், கடந்த ஜுலை 24 ஆம் தேதி ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை ஒரு வார காலம் தடுத்து வைப்பதற்கு ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அந்த தடுப்புக் காவல் அனுமதி நேற்று முடிவுற்ற நிலையில் மீண்டும் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நோர்ஹிஷாம் குறிப்பிட்டார்.

Related News