புத்ராஜெயா, டிசம்பர்.18-
மலேசியாவில் ஒரு நல்ல தலைவர் என்பவர் இனம் மற்றும் சமயத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மலேசியர்களையும் பாதுகாக்கக்கூடிய தலைவராக இருக்க வேண்டும் என்று தாம் நம்புவதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் புதிய அமைச்சுக்கு தலைமையேற்றுள்ள முன்னாள் மனித வள அமைச்சரான ஸ்டீவன் சிம், இன்று முதல் நாள் அதிகாரப்பூர்வமாக தனது பணியைத் தொடங்கியப் பின்னர் நடைபெற்ற முதலாவது செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு, நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் ஒரு சீனர், தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சுக்கு தலைமையேற்று இருப்பது, கவலையை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ள முன்னாள் தஞ்சோங் காராங் எம்.பி.யும், முன்னாள் அம்னோ அமைச்சருமான டான் ஶ்ரீ நோ ஓமார் அறிக்கை தொடர்பில் கேட்ட போது ஸ்டீவன் சிம் இதனைத் தெரிவித்தார்.
சமத்துவத்தை வலியுறுத்தி, புதிய பொருளாதாரக் கொள்கையின் கோட்பாடுகளைப் பலமுறை கேள்விக்குள்ளாக்கிய ஜசெக கட்சியைச் சேர்ந்த ஒருவரிடம் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சு ஒப்படைக்கப்பட்டது மூலம் பூமிபுத்ரா தொழில்முனைவோரின் எதிர்காலப் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்புவதாக உள்ளது என்று நோ ஓமார் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஸ்டீவன் சிம், சம்பந்தப்பட்ட அமைச்சுக்குத் தாம் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தாலும் துணை அமைச்சராக அம்னோவைச் சேர்ந்த டத்தோ முகமட் அலாமின் நியமிக்கப்பட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.








