சுபாங் ஜெயாவில் நேற்று காலை ஒருவர் உயிரிழக்கக் காரணமான ரேபிட் கேஎல் பேருந்து விபத்து தொடர்பில், 29 வயதான பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் கூறுகையில் , பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா விபத்துக்குக் காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
விபத்து தொடர்பான தொடர் நிகழ்வுகளையும் காரணத்தையும் கண்டறிய ஓட்டுநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும், அவர் மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று காலை 6.19 மணியளவில் பெர்சியாரான் சுபாங் பெர்மாயில் இருந்து சுபாங் மேவா நோக்கிச் சென்ற பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் அதிலிருந்த இருவரின் மீது மோதியது.
இந்த விபத்தில் 19 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.








