கோலாலம்பூர், ஜூலை.30-
வங்காளதேசப் பிரஜையான 47 வர்த்தகர் ஒருவரைக் கடத்திச் சென்று பிணைப் பணம் கோரியதாக 7 அந்நிய நாட்டவர்கள், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
23 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அந்நிய நாட்டவர்கள், கடந்த ஜுன் 26 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் கோலாலம்பூர், செந்தூலில் உள்ள ஒரு பள்ளிவாசல் முன்புறம் அந்த வங்காளதேச வர்த்தகரைக் கடத்திச் சென்று பிணைப் பணம் கோரியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு, உயர் நீதிமன்ற விசாரணைக்குரியது என்பதால் அந்த எழுவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த எழுவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








