கூலிம், ஜூலை.28
கூலிம் மாவட்டத்தில் அமைந்துள்ள பொது மருத்துவமனைக்கு இணைக் கட்டிடத்தைக் கட்டுவதற்கும் தரத்தை உயர்த்துவதற்கும் 588 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சரும் கெடா மாநில மேம்பாட்டுக் குழுவின் தலைவருமான டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

கூலிம் ஹய் தேக் பாக்கில் அமைந்துள்ள பொது மருத்துவமனையில் இணைக் கட்டிடம் தொடர்பான விளக்கக் கூட்டத்திற்கு டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தலைமைத் தாங்கி சில முக்கியக் கருத்துகளை கூலிம் பொது மருத்துவமனையின் நிர்வாகக் குழுவிடம் பகிர்ந்து கொண்டார்.

கடந்தாண்டு ஜூன் 14 ஆம் திகதி கூலிம் ஹய் தேக் பாக் பொது மருத்துவமனையைப் பார்வையிட்டச் சமயத்தில் இங்கு ஓர் இணைக் கட்டிடம் அவசியம் என்றும் அத்துடன் இப்பொது மருத்துவமனையில் சில மேம்பாட்டுத் திட்டங்களும் தேவைப்படுவதையும் அறிந்து கொண்டதாக சைஃபுடின் நசுத்தியோன் கூறினார். அத்துடன் அதற்கான முயற்சிகளைக் கையாண்டு இப்பொழுது இணைக் கட்டிடம் எழுப்புவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 10 ஹெக்டர் பரப்பளவில் இந்த இணைக் கட்டிடம் அமையவுள்ளது என்றார். கூலிம் மாவட்ட பொது மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அத்துடன், கூலிம் ஹய் தேக் பாக் தொழிற்பேட்டைகள் சூழ்ந்த இடமாகும். ஆகையால் அவ்விடத்தில் போதுமான வசதிகளுடன் பொது மருத்துவமனை இருக்க வேண்டும் என்றார் சைஃபுடின் நசுத்தியோன். கூலிம் மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகரித்து வருவதையும் கருத்தில் எடுத்துக் கொண்டே பொது மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்றார்.

இதற்கு இடையில் 299.2 லட்சம் ரிங்கிட் செலவில் கிரிக், குப்பாங்கிலிருந்து லுனாஸ் வரும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன . இதுவரை 25.5% விழுக்காடு அச்சாலையின் மேம்பாட்டுப் பணிகள் முடிவடைத்திருப்பதாக சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார். இச்சாலையின் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின், கூலிம் ஹய் தேக் பாக் மற்றும் புக்கிட் கரங்கான் ஆகிய சாலைகளில் ஏற்படும் சாலை நெரிசல்கள் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றார் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன்.








