பாயான் லெப்பாஸ், ஜனவரி.04-
'மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு 2026' கொண்டாட்டங்களின் போது, நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய மலேசிய போலீஸ் படை முழு அளவில் தயாராக உள்ளது என்று அதன் துணைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் தெரிவித்துள்ளார்.
மலேசியா ஒரு பாதுகாப்பான நாடு என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் முறியடிக்க போலீஸ் படை விழிப்புடன் உள்ளது என்று அவர் உறுதி அளித்தார்.
சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து முனையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்படும்.
சுற்றுலாப் பயணிகளுக்கு உதவவும், அவர்களின் புகார்களுக்கு உடனடித் தீர்வு காணவும் சிறப்புப் பயிற்சி பெற்ற சுற்றுலா போலீஸ் பிரிவினர் அதிக அளவில் பணியமர்த்தப்படுவார்கள்.
உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எவ்வித அச்சமுமின்றி மலேசியாவின் அழகை ரசிக்கலாம். அதே வேளையில், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் நடந்தால் உடனடியாகக் காவல்துறையிடம் புகாரளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.








