Feb 16, 2026
Thisaigal NewsYouTube
அனுமதியற்ற இந்து ஆலயங்களை அகற்ற 6 மாத காலத் தடை கோரிக்கை: தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழு அரசுக்கு வேண்டுகோள்
தற்போதைய செய்திகள்

அனுமதியற்ற இந்து ஆலயங்களை அகற்ற 6 மாத காலத் தடை கோரிக்கை: தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழு அரசுக்கு வேண்டுகோள்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.16-

முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்து ஆலயங்களை அகற்றுவதற்கு, அரசாங்கம் 6 மாத காலத் தற்காலிகத் தடையை விதிக்க வேண்டும் என்று தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த 6 மாத கால அவகாசம், சம்பந்தப்பட்ட ஆலயங்களின் நிலையைச் சரி பார்க்கவும், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வுகளைக் காணவும் உதவும். இது தேவையற்ற பதற்றத்தைத் தவிர்த்து, முறையான நிர்வாக நடைமுறைகளை உறுதிச் செய்யும் என்று அக்குழு தெரிவித்துள்ளது.

"ஆலயங்களை அகற்றுவது தவிர்க்க முடியாத பட்சத்தில், அங்கிருக்கும் தெய்வங்களை இடமாற்றம் செய்வதற்கு முன்பாக, சமய முறைப்படி முறையான சடங்குகள் நடத்தப்பட வேண்டும். இந்தச் செயல்முறைகளை மரியாதையுடனும் அமைதியுடனும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உதவ இக்குழு தயாராக உள்ளது" என்று அக்குழு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசிய இந்து சங்கம் மற்றும் மஇகா ஆகியவற்றின் கூட்டு முயற்சியால், இந்து தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மற்றும் சமூக பொதுக் குழுக்களின் ஆதரவுடன் தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த 6 மாதங்களில், பாதிக்கப்பட்ட ஆலயங்களின் நிலம் மற்றும் நிர்வாக நிலை குறித்த தரவுகளைச் சேகரித்து, அவற்றை நான்கு சட்டப்பூர்வ வகைகளாகப் பிரிக்க இக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து சட்டப்பூர்வமான தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்கப்படும்.

நவீன நகரத் திட்டமிடல் சட்டங்கள் வருவதற்கு முன்பே பல ஆலயங்கள் கட்டப்பட்டதால், நிலம் தொடர்பான சிக்கல்கள் நிலவுகின்றன. கடந்த வாரம் சிலாங்கூர், ரவாங்கில் உள்ள ஒரு ஆலயத்தின் ஒரு பகுதியை இடித்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

ஆலயங்கள் வெறும் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவை சமூகத்தின் புனிதமான வழிபாட்டுத் தலங்கள் என்பதால், அதிகாரிகள் கலாச்சார மற்றும் சமய உணர்வுகளுடன் செயல்பட வேண்டும் என்றும் இக்குழு வலியுறுத்தியுள்ளது.

Related News