சிரம்பான், லாபு ரயில் நிலையத்தில் பயணி ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒப்பந்தப் பணியாளர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடநத் செப்டம்பர் 15-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கே.டி.எம்.பி. தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்டவர் பணியாளர், கே.டி.எம்.பி. நிறுவனத்தின் ஊழியர் அல்ல என்றும், லாபு ரயில் நிலையத்தில் சேவை வழங்க நியமிக்கப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளர் என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.
பத்தாங் பெனார் – லாபு இடையே கே.டி.எம். கொமுட்டர் ரயில் காட்டுப் பன்றியின் மீது மோதியதால் ரயில் சேவை தடைப்பட்டது. இதனால் சுமார் 300 பயணிகள் லாபு நிலையத்தில் இறங்கி, அடுத்த ரயிலில் பயணத்தைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக ரயில் சேவையில் 125 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தக் கைகலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதுடன், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு கே.டி.எம்.பி. வருத்தம் தெரிவித்துள்ளது.








