Sep 18, 2026
Thisaigal NewsYouTube
பாறை சரிந்து லாரி ஓட்டுநர் பலி... குவாரி செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு
தற்போதைய செய்திகள்

பாறை சரிந்து லாரி ஓட்டுநர் பலி... குவாரி செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு

Share:

பேரா, சிம்பாங் பூலாய், கெராமட் பூலாய் பகுதியில் உள்ள குவாரியில் பாறை சரிந்து லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தக் குவாரியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்த தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையான ஜே.கே.கே.பி. உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாலை சுமார் 4.40 மணியளவில் இந்த விபத்து நடந்தது. 53 வயதான சிவக்குமார் மருதமுத்து என்ற அந்த லாரி ஓட்டுநர் குவாரி பகுதிக்குள் நுழையக் காத்திருந்த போது, மலைப்பகுதியில் இருந்து 100 டன் எடை கொண்ட பெரிய பாறை ஒன்று திடீரென சரிந்து அவர் ஓட்டிய லாரியின் முன்பகுதியில் விழுந்தது.

லாரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய சிவக்குமார், பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஏ. சிவநேசன் கூறுகையில், பொறியாளர்களின் தொழில்நுட்ப அறிக்கை கிடைத்த பின்னர் இந்த விபத்து தொடர்பில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றார்.

முதற்கட்ட விசாரணையில் பாறை சரிவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. விபத்து நடந்த நாளின் காலையில் குவாரியில் வெடிவைத்து தகர்க்கும் பணிகள் நடைபெற்றிருந்தாலும், அதற்கும் விபத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை.

1989ஆம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாக இயங்கி வரும் இந்தக் குவாரியில் இதற்கு முன் விபத்து பதிவாகவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று டத்தோ சிவநேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related News