முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பும், எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதித்துள்ள முடிவும், மாமன்னரின் அரசியலமைப்பு அதிகாரத்துக்கு உட்பட்டது என்று தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது பிரிவின் கீழ் மாமன்னருக்கு வழங்கப்பட்டுள்ள மன்னிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான தாக்கம், நாட்டின் நிலைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை தொடர்பாக பிரதமரும், சட்டத்துறைத் தலைவரும் ஆலோசனை வழங்கியதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார்.
நஜீப்புக்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனையுடனான மன்னிப்பின்படி, அவர் 2028 ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை எஞ்சிய தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்கலாம். இதற்கு 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும்.
நிபந்தனைகள் மீறப்பட்டால், மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு, எஞ்சிய தண்டனையை சிறையில் தொடர வேண்டியிருக்கும்.
அதேவேளை, நஜிப்புக்கு உள்ளடக்கிய நிலுவையில் உள்ள வழக்குகள் உட்பட அனைத்து ஊழல் வழக்குகளும் சட்டத்தின்படியே தொடர்ந்து கையாளப்படும் என்றும், ஊழலுக்கு எதிரான அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஃபஹ்மி உறுதியளித்தார்.








