முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனையுடனான மன்னிப்பு தொடர்பில் ஜசெக தனது நிலைப்பாட்டை நாளை முடிவு செய்யவுள்ளது.
ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறுகையில், கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடவுள்ளதாகவும், அப்போது கட்சியின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
நஜிப்பின் மன்னிப்பு தொடர்பான மன்னிப்பு வாரிய உறுப்பினர் ஹன்னா இயோவின் நிலைப்பாடு, கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்ப இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, மாமன்னரின் மன்னிப்பு வழங்கும் அரசியலமைப்பு அதிகாரத்தை ஜசெக மதிப்பதாகவும், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் லோக் தெரிவித்தார்.
1எம்டிபி விவகாரத்தில் நஜிப்பின் குற்றத் தீர்ப்பையும், அந்த விவகாரத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையையும் மறக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.








