Sep 18, 2026
Thisaigal NewsYouTube
நஜிப்புக்கு வீட்டுக் காவல் என்றால்... ஊழல் எதிர்ப்பு நம்பகத்தன்மை பாதிக்கும் – டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்
தற்போதைய செய்திகள்

நஜிப்புக்கு வீட்டுக் காவல் என்றால்... ஊழல் எதிர்ப்பு நம்பகத்தன்மை பாதிக்கும் – டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிப்பது, மலேசியாவின் ஊழல் எதிர்ப்பு நம்பகத்தன்மைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியா தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் டாக்டர் ரேமன் ராம் கூறுகையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை மதிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை, 42 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் நஜிப்பின் குற்றத் தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் ஒருமனதாக உறுதி செய்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

அரசியல் செல்வாக்கு அல்லது அந்தஸ்து கொண்டவர்களுக்கு சாதாரண குற்றவாளிகளைக் காட்டிலும் மாறுபட்ட விதத்தில் சட்டம் அமல்படுத்தப்படலாம் என்ற எண்ணத்தை இது உருவாக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற சலுகைகள் எதிர்காலத்தில் பெரிய அளவிலான ஊழல் மற்றும் நிதிக் குற்ற வழக்குகளிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஊழல் தடுப்பு நடவடிக்கைகளின் தடுப்பு விளைவைப் பலவீனப்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.

மலேசியாவின் அனைத்துலக ஊழல் கண்ணோட்டக் குறியீட்டு மதிப்பீட்டிலும் இது போன்ற உயர்மட்ட முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கக்கூடும் என்றும் டாக்டர் ரேமன் ராம் குறிப்பிட்டார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையும், பொறுப்புக்கூறலும் வலுவாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News