முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கை எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதித்திருப்பது, மலேசியாவில் இதுவரை சோதிக்கப்படாத புதிய சட்டப் பாதையை உருவாக்கியுள்ளதாக அரசியலமைப்பு வழக்கறிஞர் ஆண்ட்ரூ கூ தெரிவித்துள்ளார்.
தற்போது குற்றவாளிகள் வீட்டுக் காவலில் தண்டனையை அனுபவிப்பதற்கான குறிப்பிட்ட சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை என்றும், கூட்டரசு அரசியலமைப்போ தற்போதைய சிறைச்சாலைச் சட்டங்களோ இதற்கான தெளிவான கட்டமைப்பை வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறைச்சாலைச் சட்டத் திருத்த மசோதாவிலும் மின்னணு கண்காணிப்பு உள்ளிட்ட மாற்றங்கள் முன்மொழியப்பட்டிருந்தாலும், அந்த மசோதா இன்னும் சட்டமாகவில்லை.
எனவே நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான விதிமுறைகள், சந்திப்பு, வெளியே செல்லுதல் மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறை அம்சங்கள் குறித்து பல கேள்விகள் எழுவதாக ஆண்ட்ரூ கூ தெரிவித்தார்.
மேலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பின் 8-வது பிரிவின் அடிப்படையிலும் இந்த ஏற்பாடு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.








