கோலாலம்பூர், நவம்பர்.14-
கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ள ஓர் அடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் பாதுகாவலர் சந்திரன், அந்த குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஆடவர் ஒருவரினால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் அந்த பாதுகாவலரின் சவப் பரிசோதனை அறிக்கைக்காகப் போலீசார் காத்திருப்பதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுகார்னோ முகமட் ஸஹாரி தெரிவித்தார்.
பாதுகாவலர் சந்திரன் மரணம் தொடர்பில் விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரால் தாக்கப்பட்ட பாதுகாவலர் சந்திரன், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற சில மணி நேரத்தில் மாரடைப்பினால் காலமானார்.
முதலில் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட 32 வயது நபர், பின்னர் சந்திரனின் மரணத்தைத் தொடர்ந்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏசிபி சுகார்னோ தெரிவித்தார்.








