சிப்பாங், ஜனவரி.26-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 1-இல் சர்வதேச பயணிகளின் வருகை நேரத்தைக் குறைக்கவும், நெரிசலைத் தவிர்க்கவும் இன்று முதல் 'பச்சை வழித்தடம்' முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
Malaysia Airports Holdings Bhd, அரச மலேசிய சுங்கத்துறை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாங்கள் கொண்டு வரும் பொருட்களில் சுங்கத்துறையிடம் அறிவிக்க வேண்டிய பொருட்கள் ஏதும் இல்லாத பயணிகள், இந்த 'பச்சை வழித்தடத்தை' பயன்படுத்தி நேரடியாக வெளியேறலாம். இது அவர்கள் காத்திருக்கும் நேரத்தை வெகுவாகக் குறைக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
அறிவிக்க வேண்டிய பொருட்கள் அல்லது வரி செலுத்த வேண்டிய பொருட்கள் வைத்திருப்பவர்களுக்காக தனியாக ஒரு 'சிவப்பு வழித்தடம்' ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் சோதனைகளை முடித்து வரி செலுத்தலாம்.
இது குறித்து மேலும் விவரித்த அமைச்சர் அந்தோணி லோக், "இதற்கு முன்பு அனைத்து பயணிகளும் ஒரே வரிசையில் செல்ல வேண்டியிருந்தது. சுங்கத்துறையினர் ஒவ்வொருவரின் பைகளையும் ஸ்கேன் செய்யும் போது நீண்ட வரிசையும் நெரிசலும் ஏற்பட்டது. இப்போது புதிய முறையின் மூலம் இந்தத் தாமதம் தவிர்க்கப்படும்” என்று தெரிவித்தார்.
பயணிகள் தங்களின் பயணப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டு விரைவாகவும் வசதியாகவும் விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதை உறுதிச் செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.








