கோலாலம்பூர், டிசம்பர்.27-
தனக்கு எதிராகக் கூறப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை செய்வதற்கு ஏதுவாக ஆயுதப்படை தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ முஹமட் ஹாஃபிஸுடின் விடுமுறையில் செல்கிறார்.
ஆயுதப்படை தளபதிக்கு எதிரான விசாரணை, தனிப்பட்ட நலன் சார்ந்து இருக்காமல் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு நிர்வாக அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
இராணுவப்படையைச் சேர்ந்த ஜெனரல் டான் ஶ்ரீ முஹமட் நிஸாம் ஜாஃபார், கட்டாயப் பணி ஓய்வுக்கு ஆளாகியுள்ள நிலையில், கடற்படை தளபதி லக்சமனா டான் ஶ்ரீ டாக்டர் ஸுல்ஹெல்மி இத்நாயின், மலேசிய ஆயுதப்படைக்கு இடைக்காலமாகப் பொறுப்பேற்பார் என்றும், அவரின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் காலிட் நோர்டின் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு வெளியாகிய ஊடகத் தகவல்படி, இராணுப்படையைச் சேர்ந்த உயர்நிலை மூத்த அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் பெரியவில் பணம் வரவு வைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்து அதிகாரப்பூர்வமாக புகார் செய்யப்படுமானால் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்யத் தயாராக இருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி அண்மையில் தெரிவித்து இருந்தார்.








