கோம்பாக், ஜனவரி.11-
இருள் விலகாத அதிகாலை வேளையில் பிளஸ் நெடுஞ்சாலை 441.2 ஆவது கிலோமீட்டரில் மின்னல் வேகத்தில் சென்ற விரைவுப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி குறுக்காக நின்றதால் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்தது. நிலைதடுமாறி நின்ற பேருந்தின் மீது பின்னால் வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் அடுத்தடுத்து மோதி மோதியதில், அந்த இடமே பெரும் போர்க்களமாகக் காட்சியளித்தது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வேளையில், பேருந்தில் பயணித்தவர்களில் 7 பேருடன் மோட்டார் சைக்கிளோட்டி, லாரி ஓட்டுநர் ஆகியோர் பலத்தக் காயங்களுடன் உயிர் தப்பியதாக கோம்பாக் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் நோர் அரிஃபின் முஹமட் நாசீர் தெரிவித்தார். சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசலை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் காவற்படையினர், நேரில் பார்த்த சாட்சிகள் உடனே முன்வந்து தகவல் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.








