Jul 18, 2026
Thisaigal NewsYouTube
நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!
தற்போதைய செய்திகள்

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

Share:

கடந்த 2017ஆம் ஆண்டு பதின்ம வயது இளைஞர் டி. நவீன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேரின் விசாரணைக்கான தேதிகளை பினாங்கு உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் 7 முதல் 9 ஆம் தேதி வரையிலும், அக்டோபர் 12 முதல் 16 ஆம் தேதி வரையிலும் இந்த வழக்கு விசாரணை பினாங்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெறும். உயர் நீதிமன்ற துணைப் பதிவு அதிகாரி முகமது பிர்தாஸ் அப்துல் வஹாப் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றபோது அடுத்த விசாரணை தேதிகள் நிர்ணயிக்கப்பட்டன.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜே. ரகேசுதன், எஸ். கோகுலன் மற்றும் சம்பவத்தின் போது சிறுவர்களாக இருந்த இருவர் என நான்கு பேரும் கடந்த 2023 அக்டோபரில் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றம் இத்தீர்ப்பை ரத்து செய்து, அவர்கள் தங்களின் தரப்புப் பாதுகாப்பை முன்வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த வழக்கின் முழுமையான உண்மைகள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் முந்தைய நீதிமன்றப் பதிவுகளை மீண்டும் மறுஆய்வு செய்து தயார் ஆக வேண்டும் என்பதே தற்போதைக்கு தங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் முகமது அம்ரி ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

மீண்டும் கைது செய்யப்பட்ட அந்த நால்வரும் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News