கோலாலம்பூர், ஜனவரி.05-
கேபிள் திருட்டு குறித்து புகார் அளிக்கச் சென்ற குடியிருப்பாளர்கள் பிரதிநிதியான ஜசெக உறுப்பினர் ஒருவர் போலீஸ் அதிகாரி ஒருவரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை செய்ய வேண்டும் என்று புக்கிட் பிந்தாங் எம்.பி. ஃபோங் குய் லுன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் செயல் குறித்து ஜசெக.வின் முக்கியத் தலைவரான ஃபோங் குய் லுன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கோலாலம்பூரில் அண்மையில் நடைபெற்ற கேபிள் திருட்டுச் சம்பவம் தொடர்பாக கட்சி தொடர்புடைய முக்கிய உதவியாளர் ஒருவர் புகார் அளிக்க போலீஸ் நிலையத்திற்குச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
புகாரைப் பெற்றுக் கொண்டு, நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி, புகார் அளிக்க வந்த நபரையே கைது செய்து தடுத்து வைத்துள்ளார் என்று ஃபோங் குய் லுன் குற்றஞ்சாட்டினார்.
மக்கள் பிரதிநிதி ஒருவருக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரண மக்களின் பாதுகாப்பு என்னவாகும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரியின் இந்த 'அதிகார துஷ்பிரயோகம்' குறித்து புக்கிட் அமான் தலைமையகம் மற்றும் போலீஸ் ஒருமைப்பாட்டுத் துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.








