கோலாலம்பூர், ஆகஸ்ட்.04-
அந்நிய ஆண்களை அல்லது அந்நியப் பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ள மலேசியர்களின், வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கான 1,980 குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்நிய நாட்டுத் துணையைக் கரம் பிடித்து, வெளிநாட்டில் பிறந்த மலேசியர்களின் குழந்தைகளுக்குஇயல்பாகவே குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் 15 ஆவது விதியில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சிறார்களுக்கான 1, 980 குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் சைஃபுடின் விளக்கினார்.
மலேசியர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் பிறந்தாலும், அவர்கள் முறையாக விண்ணப்பங்கள் செய்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.








