Nov 25, 2025
Thisaigal NewsYouTube
போலீசாருடனான துப்பாக்கிச் சண்டை: பயங்கரக் கொள்ளையன் சுட்டு வீழ்த்தப்பட்டான்
தற்போதைய செய்திகள்

போலீசாருடனான துப்பாக்கிச் சண்டை: பயங்கரக் கொள்ளையன் சுட்டு வீழ்த்தப்பட்டான்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.25-

போலீசாருடனான துப்பாக்கிச் சண்டையில் பயங்கர கொள்ளையன் சுட்டு வீழ்த்தப்பட்டான். சிலாங்கூர், டெங்கில், ஜாலான் பந்திங், பத்து 8, தெப்பி ஜாலான் என்ற இடத்தில் நேற்று திங்கட்கிழமை, இரவு 8.10 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

ஆயுதம் தாங்கி, வீடு புகுந்து திருடும் முகமூடிக் கொள்ளையர்களை அடையாளம் காணும் வகையில் புக்கிட் அமாான் போலீஸ் தலைமையகத்தின் கடுங் குற்றத்தடுப்பு பிரிவான D9 (டி நைன்) பந்திங் வட்டாரத்தில் நடத்திய சோதனையில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் அடையாளம் காணப்பட்டான்.

சந்தேகத்திற்கு இடமான சில்வர் நிறத்திலான Myvi காரை, போலீஸ் குழுவினரின் கார் மோதி, தடுத்து நிறுத்தி, அந்தச் சந்தேகப் பேர்வழியைக் கைது செய்ய முயற்சித்தனர்.

அப்போது, சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, போலீசாரை நோக்கி துப்பாக்கியினால் சுடத் தொடங்கியுள்ளான். தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் பதிலடி துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சண்டையில் அந்தக் கொள்ளையன், சம்பவ இடத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டான் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல், இன்று அதிகாலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உள்ளுரைச் சேர்ந்த அந்தச் சந்தேகப் பேர்வழி, பயன்படுத்திய Myvi காரை, போலீசார் சோதனையிட்ட போது அதில் COLD 45 ரக துப்பாக்கி, Kristal வகையை சேர்ந்த போதைப் பொருள் மற்றும் KYNOCH ரகத்திலான 3 துப்பாக்கித் தோட்டாக்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியதாக டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக டத்தோ குமார் முத்துவேல் குறிப்பிட்டார்.

இதனிடையே சுட்டுக் கொல்லப்பட்ட அந்த இந்திய ஆடவன், ஆயுதம் தாங்கிய, வீடு புகுந்து திருடும் கும்பலைச் சேர்ந்தவன் என்று அறியப்படுகிறது.

அவன், கடந்த ஆண்டு பூச்சோங்கில் ஏர்கண்டிஷன் பழுது பார்க்கும் ஓர் இந்திய குத்தகையாளர் வீட்டில் நுழைந்து, ஒரு கும்பலாக வன்முறைச் செயலில் ஈடுபட்டு, அந்நிய நாணயங்களை உள்ளடக்கிய இரும்புப் பெட்டகத்தில் பல ஆயிரம் ரிங்கிட் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட கும்பலைச் சேர்ந்த தலைவன் என்று நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் தனது வயதான தாயாரைக் கடுமையாகத் தாக்கி விட்டு, அந்தக் கும்பல் சென்றதாக சம்பந்தப்பட்ட இந்திய குத்தகையாளர் சுபங் ஜெயா போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருந்தார்.

சம்பந்தப்பட்ட கொள்ளைக் கும்பல் உறுப்பினர்கள் பிடிபட்ட போதிலும், ஆதாரங்கள் இல்லை என்று கூறி,விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து, சம்பந்தப்பட்ட குத்தகையாளர் தனது அதிருப்தியை வெளிப்படுத்த புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முன்புறம் தனது வயதான தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் அமைதி ஆட்சேப மறியலில் ஈடுபட்டு, ஒரு மகஜரையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News