கோலாலம்பூர், நவம்பர்.25-
கோலாலம்பூர், செள கிட் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12.15 மணியளவில் போலீஸ்காரரைக் காரில் மோதித் தள்ளிவிட்டு தப்பியோடிய மூன்று நபர்களைப் போலீசார் விரட்டிச் சென்று வளைத்துப் பிடித்தனர்.
அவர்களின் ஒருவர் தப்பியோட முயற்சித்த போது ஒரு மேட்டுப் பகுதியிலிருந்து கீழே விழுந்து காயத்திற்கு ஆளானார். இந்தச் சம்பவம் மத்திய வங்கியான பேங்க் நெகாரா கட்டடத்தின் அருகில் நிகழ்ந்தது என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.
செள கிட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாகச் சென்று கொண்டு இருந்த Honda H.R.V. காரை, ரோந்துப் போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது போலீசாரை இடித்துத் தள்ளிவிட்டு, மூவர் பயணித்த அந்த கார், ஜாலான் கூச்சிங் வாயிலாக ஜாலான் பார்லிமெண்டுக்குச் செல்லும் பேங்க் நெகாரா பாதையை நோக்கிச் சென்றது.
ரோந்துப் போலீசார் அந்தக் காரை விரட்டிச் சென்றனர். சம்பந்தப்பட்ட கார் சென்ற வேகத்தில் சில கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் இடித்து தள்ளிவிட்டு சென்றதாக ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.
போலீசார் தங்களை நெருங்கி விட்டனர் என்பதை அறிந்த காரைச் செலுத்திய சந்தேகப் பேர்வழி, பதற்றத்தில் காரை மரத்தில் மோதியுள்ளான். அவனைப் பிடிக்க போலீசார் முயற்சித்த வேளையில் அவன் அங்கிருந்து தப்பிக்க முயன்றான். மற்ற இருவர் காரிலிருந்து இறங்கும் போது வளைத்துப் பிடிக்கப்பட்டதாக சம்பவ இடத்தில் காணப்பட்ட ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.
போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்த சந்தேகப் பேர்வழி, ஒரு மேட்டுப் பகுதியில் தப்பியோட முயன்ற போது கீழே விழந்து காயத்திற்கு ஆளாகினான். அவன் பின்னர் MERS 999 வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டான்.
அந்த மூவர் குறித்து போலீசார் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருவதாக ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.








