நராதிவாட், நவம்பர்.23-
தெற்கு தாய்லாந்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உட்பட 42 மலேசியர்கள் ஒரு தங்கும் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம் Hatyaiயில் இன்று காலை நிகழ்ந்தது. நிலைமையை அறிந்த சாங்லாவுக்கான மலேசியத் துணைத் தூதர் அஹ்மாட் ஃபாமி அஹ்மாட் சர்காவி உடனடியாக Hatyai தங்கும் விடுதிகள் சங்க உதவியுடன், பாதிக்கப்பட்ட மலேசியர்கள் மாற்று விடுதிக்கு மாற்றப்பட்டதை உறுதிச் செய்தார்.
இந்தக் கடும் வெள்ளச் சூழலில் இதுபோன்ற மனிதநேயமற்ற செயல் நடந்திருக்கக் கூடாது என்று அவர் வேதனை தெரிவித்ததோடு, மீட்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்களும் பயண உதவியும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். வெள்ளத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள் தரைவழி அல்லது வான்வழி மூலம் தாயகம் திரும்ப உதவி தேவைப்பட்டால், துணைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.








