மலேசிய மத்தியஸ்த மையமான MMC, வரும் மே மாதம் முதல் B40 மற்றும் M40 வருமானப் பிரிவினருக்கு ஒப்பந்தப் பிணக்குகளைத் தீர்க்க இலவச உதவியை வழங்கவுள்ளது.
நீதிமன்றம் செல்லாமல், சட்டச் செலவுகள் இன்றிப் பிரச்சனைகளைத் தீர்க்க இந்த மையம் உதவும். இதற்கான செலவுகளை மத்தியஸ்த மையமே ஏற்கும் என்று சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் தெரிவித்தார்.
250,000 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவான மதிப்புள்ள ஒப்பந்தப் பிணக்குகளுக்கு இந்த 'புரோ போனோ' மத்தியஸ்த சேவை வழங்கப்படும் என்று அவர் விளக்கிானர்.
சிறு ஒப்பந்ததாரர்கள், ஃப்ரீலான்ஸர்கள், வீடியோகிராபர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போன்றோர் தங்களுக்குரிய கட்டணப் பிரச்சனைகளுக்கு இதன் மூலம் தீர்வு காணலாம்.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதற்கு முன்பே, இந்த மையத்தை அணுகிப் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகப் பிரச்சனைகளை முடித்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டம் வரும் மே முதல் வாரத்தில் தொடங்கப்படும் என அமைச்சர் அசாலினா தெரிவித்துள்ளார்.








