பேராக் மாநிலம் தெலுக் இந்தானில் உரிமம் இல்லாமல் கடன் வழங்கியதாகவும், பிறருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளை வைத்திருந்ததாகவும் சந்தேகிக்கப்படும் இரண்டு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் சுவா கோக் லியான் கூறுகையில், மேபேங்க் ஏடிஎம் மையத்தில் ஒருவர் பணம் எடுத்துக் கொண்டிருந்த போது முதலில் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவரிடம் பிறருக்குச் சொந்தமான இரண்டு ஏடிஎம் அட்டைகளும் 300 ரிங்கிட் ரொக்கப் பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜாலான் ஆ சியோங் பகுதியில் உள்ள பணம் கடன் வழங்கும் வளாகத்தில் போலீசார் சோதனை நடத்தி, இரண்டாவது நபரைக் கைது செய்துள்ளனர்.
அங்கு மேலும் மூன்று ஏடிஎம் அட்டைகளும் சில தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்கு உதவும் வகையில் இன்று செப்டம்பர் 6-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சுவா கோக் லியான் தெரிவித்துள்ளார்.








