நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, மலேசியாவைச் சேர்ந்த யுனைடெட் சிக்ஸ் மலேசியா தன்னார்வக் குழு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நேபாளம் சென்றுள்ளது.
கடந்த ஆண்டு தாய்லாந்து, ஹாட் யாய் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானவர்களை மீட்ட இந்தக் குழு, நேற்று இரவு காட்மண்டுவை சென்றடைந்தது.
குழுவின் துணைத் தலைவர் மண்டீப் சிங், இன்று காட்மண்டுவில் தேவையான நிவாரணப் பொருட்களை வாங்கி, நாளை பேரிடர் பாதித்த பகுதிக்கு செல்வதாக தெரிவித்தார்.
சாலை மற்றும் நிலச்சரிவு நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், நான்கு சக்கர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மழை பெய்தால் சாலைகளையே காண முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தானதாக இருப்பதாகவும், பேரிடர் பகுதிக்குச் செல்லும் பாதைகள் கணிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் மண்டீப் தெரிவித்தார்.
மாயமான 55 மலேசியர்களை தேடும் பணிக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிவாரண நடவடிக்கைகளுக்கும் இந்தக் குழு பங்களிக்க உள்ளது








