நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து மாயமான 55 மலேசியர்களை தேடும் பணியில் மலேசியாவின் சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவான ஸ்மார்ட் களமிறக்கப்பட்டுள்ளதால், அவர்களது குடும்பத்தினரிடையே மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
11 நாட்களுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைந்து வருவதாகத் தெரிந்தாலும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரை நம்பிக்கையை கைவிட மாட்டோம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தேடுதல் பணிக்காக குடும்பத்தினர் சேகரித்த புகைப்படங்கள், காணொளிகள், ஜிபிஎஸ் தகவல்கள் மற்றும் கடைசியாக தொடர்பில் இருந்த இடங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஸ்மார்ட் குழுவினர் பயன்படுத்துவார்கள் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மலேசியாவின் ஸ்மார்ட் குழுவின் நேபாள வருகை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக Malaysia Solidarity: Families In Hope குழுவின் தலைவர் டாக்டர் ஆர். மணிவண்ணன் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாத 55 மலேசியர்களை தேடும் பணிக்காக, 11 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்மார்ட் குழு இன்று நேபாளத்துக்கு புறப்பட்டது.








