கோலாலம்பூர், அக்டோபர்.26-
சமீபகாலமாக ஆன்லைன் வீடியோ கேம்களில் உள்ள வன்முறை உள்ளடக்கம், குழந்தைகளையும் இளைஞர்களையும் தீவிரமான, தவறான செயல்களைச் செய்யத் தூண்டக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொலை, சண்டை, ஒழுக்கமற்ற நடத்தைகளைச் சித்தரிக்கும் விளையாட்டுகளுக்குத் தங்கள் பிள்ளைகள் ஆளாவதை பல பெற்றோர்கள் உணருவதில்லை என்றும், இஃது இளம் தலைமுறையினரின் உணர்ச்சியையும் மனநிலையையும் பெரிதும் பாதிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக நேரம் வன்முறைக் காட்சிகளைக் காணும் சிறுவர்கள், கற்பனைக்கும் உண்மைக்கும் இடையிலான வேறுபாட்டைப் பிரித்தறிய முடியாததால், எளிதில் கோபமடைந்து சண்டையிடும் குணத்தை வளர்ப்பதாகக் குழந்தை உளவியலாளர் டாக்டர் நோர் அயிஷா ரொஸ்லி சுட்டிக் காட்டினார். இளம் வயதினரின் மனநலனைப் பாதுகாக்க, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் விளையாட்டுச் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து, வன்முறையான விளையாட்டுகளுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.








