கோலாலம்பூர், டிசம்பர்.05-
கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி மலாக்காவில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று விடுத்த உத்தரவை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வரவேற்றுள்ளார்.
பிரதமரின் இந்த உத்தரவு ஒரு தெளிவான மற்றும் வலுவான செய்தியை வெளிப்படுத்துகிறது. போலீஸ் தங்கள் பொறுப்பில் உறுதியுடன் இருந்து சட்டங்களை அமல்படுத்த வேண்டியது அவசியமானாலும், போலீசார் பொறுப்புடைமை மற்றும் சட்டத்தை முறையாக நிலைநிறுத்துவதில் அரசு மிகுந்த தீவிரத்துடன் கண்காணிப்பதை இது புலப்படுத்துகிறது என்று கோபிந்த் சிங் குறிப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் பிரதமரின் உறுதிப்பாடு மிக முக்கியமானது, குறிப்பாக சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட எந்த அதிகாரியும் பாதுகாக்கப்படக்கூடாது என்று போலீஸ் படைத் தலைவருக்கு பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த உறுதியான நிலைப்பாடு, மக்களின் நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும், நாட்டில் நீதி மற்றும் பொறுப்புணர்வின் அடித்தளங்களை வலுப்படுத்துவதற்கும் மிக முக்கியமானதாகும் என்று கோபிந்த் சிங் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மலாக்கா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று இந்திய இளைஞர்கள், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை சுற்றியுள்ள முரண்பட்ட தகவல்களினால் உருவாகியுள்ள சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிய அவசியத்தை தாம் முன்வைத்ததாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.








