கோலாலம்பூர், நவம்பர்.10-
போலீஸ்காரர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் அரச மலேசிய போலீஸ் படையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஷீலா ஷேரோனுக்கு எதிரான விசாரணை முடிவடைந்து விட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை தற்போது துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் ஓர் உணவகத்திற்கு முன்பு, ஒரு பாகிஸ்தான் ஆடவரைத் தடுத்து நிறுத்தி, விசாரணை செய்து கொண்டு இருந்த மூன்று போலீஸ்காரர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக ஷீலாவிற்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
அந்த வெளிநாட்டு ஆடவரை மடக்கிய போலீஸ்காரர்கள், அவரிடம் வாகனமோட்டும் லைசென்ஸ் இல்லை என்று கூறி, அவரை மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சி நடத்ததாகவும், அதனைத் தாம் தட்டிக் கேட்டதாகவும் ஷீலா எதிர்வினையாற்றியுள்ளார்.








