கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-
கூட்டரசு நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகளில் ஒருவரான டான் ஶ்ரீ நளினி பத்மநாதனின் பணி சேவைக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி 66 வயதை எட்டும், நளினி பத்மநாபன், கட்டாய பணி ஓய்வு பெறும் நிலையில் அவரின் சேவைக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்பதல் அளித்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.
இதற்கான கடிதம் நேற்று வியாழக்கிழமை டான் ஶ்ரீ நளினி பத்மநாதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நளினி பத்மநாதனின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டு இருப்பது மூலம், இவ்வாண்டில் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கும் 5 ஆவது நீதிபதியாக இவர் விளங்குகிறார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட நளினி பத்மநாதன், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி, அப்பீல் நீதிமன்ற நீதிபதி , கூட்டரசு நீதிமன்ற நீதிபதி என தொடர் பதவி உயர்வின் மூலம் தொடர்ந்து நீதிப் பரிபாலனத்துறைக்குச் சேவையாற்றி வருகிறார்.
நீதிபதிகளின் கட்டாயப் பணி ஓய்வு வயது 66 ஆகும்.








