அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால், பொதுமக்கள் எதிர்கொள்ளும் சுமையை குறைக்கும் நோக்கில், சம்பங்கன் அசாஸ் ராமா எனப்படும் சாரா உதவித்தொகையானது, விரைவில் மேலும் அதிகரிக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, நேற்று நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கம் ஏற்கனவே சம்பங்கன் துனி ராமா எஸ்.டி.ஆர் மற்றும் சாரா உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன், மாநில அரசு ஊழியர்களுக்கு கணிசமான போனஸ் வழங்கியிருந்தாலும் கூட, மக்களின் அனைத்து பிரச்சினைகளும் முழுமையாக தீர்ந்துவிட்டன என்று கூற முடியாது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார நிலை அனுமதித்தால், எஸ்.டி.ஆர் மற்றும் சாரா உள்ளிட்ட மக்களுக்கான நிதி உதவித் திட்டங்களை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளை மடானி அரசாங்கம் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கருவூலத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஜோஹன் மகமூத் மெரிக்கனுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் தேசிய வரவு-செலவுத் திட்டத்தில் இது பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








