ஜார்ஜ்டவுன், ஜனவரி.25-
பினாங்கு குளுகோரில் அமைந்துள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியிலிருந்து 15 வயது சிறுமி ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவத்தை காவற்படை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று மதியம் சுமார் 1 மணி அளவில், அந்தச் சிறுமி தனது வீட்டின் ஜன்னல்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அந்தச் சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் வேளையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக திமோர் லாவுட் மாவட்டக் காவற்படைத் துணைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் லீ சுவீ சாக் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த விபத்து குறித்து பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளையோ அல்லது யூகங்களையோ சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








