கோலாலம்பூர், பிப்ரவரி.13-
சிலாங்கூரைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் டோட்டோ 4D ஜாக்பாட் 1 குலுக்கலில், 23.53 மில்லியன் ரிங்கிட் பரிசை வென்று கோடீஸ்வரர்களாகியுள்ளனர்.
49 வயதுடைய சந்தைப் பிரிவு மேலாளரும், 66 வயதுடைய ஓய்வு பெற்ற அவரது கணவரும் இந்த மாபெரும் வெற்றியை அண்மையில் ஸ்போர்ட்ஸ் டோட்டோ தலைமையகத்தில் உறுதிப்படுத்தினர். வெறும் 2 ரிங்கிட் முதலீட்டில் வாங்கப்பட்ட '6777' மற்றும் '5085' ஆகிய எண்களே இவர்களுக்கு மொத்தம் 2 கோடியே 35 லட்சத்து 32 ஆயிரத்து 445 ரிங்கிட் 40 சென் பணத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்த அதிர்ஷ்ட எண்கள் குறித்து வெற்றி பெற்ற பெண்மணி கூறுகையில், இவை தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டையான மைகாட் எண்களின் கடைசி நான்கு இலக்கங்கள் என்று தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இதே எண்களைப் பயன்படுத்தி பந்தயம் கட்டி வந்ததாகவும், தனது கணவர் எண்களைத் தேர்வு செய்ய, தான் டிக்கெட்டுகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு முறை டோட்டோ நிலையத்திற்குச் செல்லும் போதும் சராசரியாக 200 முதல் 300 ரிங்கிட் வரை இதற்காகச் செலவிடுவதாக அவர் பகிர்ந்து கொண்டார்.
சீனப் புத்தாண்டுக்கு முன்னதாகக் கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றியை ஒரு காலத்தேற்ற பரிசாகக் கருதும் இத்தம்பதியினர், இந்தத் தொகையைக் கொண்டு தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தவும், புதிய வீடு வாங்கவும் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமித்து வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். "இத்தனை ஆண்டுகளாக விளையாடிய இந்த எண்கள், ஒரு நாள் எங்கள் வாழ்க்கையையே மாற்றும் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை" என அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.








