பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.28-
கடந்த ஏப்ரல் மாதம் சுபாங் ஜெயா, புத்ரா ஹையிட்ஸ் பகுதியில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்புத் தீச்சம்பவத்தில் வெளியான எரிவாயு, 5 லட்சம் சமையல் எரிகலன்களை நிரப்பக்கூடியது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதில் வெளியான எரிவாயு, 14 கிலோகிராம் எடை கொண்ட 5 லட்சம் சமையல் எரிகலன்களை நிரப்பக்கூடியது என்று உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தொடர்பு ஆகியவற்றுக்கான சிறப்பு நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை ஆவணங்களில் இது தெரிய வந்துள்ளது.
அச்சம்பவத்தில் சுமார் 400 மில்லியன் ஸ்டாண்டர்ட் கியூபிக் அடிகள் (standard cubic feet) எரிவாயு வெளியானதாக பெட்ரோலியப் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் ஹஸ்தின் சே மாட் தெரிவித்தார்.
தீயணைப்பு, மீட்புப் பிரிவிடமிருந்து பெற்ற தகவல்களை மேற்கோள்காட்டி அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் வெளியான எரிவாயு ஏழு விநாடிகளில் தீப் பிடித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் ஒன்றாம் தேதி நிகழ்ந்த இந்த வெடிப்புச் சம்பவத்தில் 511 வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.








