தீபாவளி கொண்டாட்டத்துடன் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் மறுசூழற்சி விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கெடா மாநில இடாமான் நிறுவனத்தின் ஏற்பாட்டில் லுனாஸ் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மிகவும் விமரிசையாக " LIGHT OF DEEPAVALI " தீப ஒளி எனும் நிகழ்வு நடைபெற்றது .
லுனாஸ் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்த தீபாவளி கொண்டாட்டத்தை கூலிம் மாவட்ட சமூக நல அமைப்பின் ஆலோசகரும் கூலிம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வழக்கறிஞர் சுவா தீயோங் கீ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார் . அவருடன் இணைந்து கெடா மாநில இடாமான் நிறுவனத்தின் நிதி, வணிகபி பிரிவின் தலைவரான அஹ்மாட் ஃபதுல் ஜொஹாரி முஹமாட் ரட்சி கலந்து கொண்டார்.
" குப்பைகளை வீசுவதற்கு முன் சிந்திப்போம் " எனும் கருப்பொருளை தாங்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த வாரம் லுனாஸ் வெல்லெஸ்லி தமிழ்ப்பள்ளியில்
தலைமை ஆசிரியர் செல்வி பச்சையப்பன் தலைமையில் நடைபெற்றது.
வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்று வரும் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு வார காலமாக மறுசூழற்சி பொருட்களைச் சேகரிக்கும் போட்டியில் கலந்து கொண்டனர்.
அதன் பலனாக அப்பள்ளியில் மட்டும் 796.65 கிலோ கிராம் மறுசூழற்சி பொருட்களை சேகரித்திருப்பது மிக மகிழ்ச்சியாக இருப்பதாக அஹ்மாட் ஃபதுல் குறிப்பிட்டார். தவிர மறுசுழற்சி பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஊட்டப்பட்டது.
இதற்கிடையில் , இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை வரவேற்கும் வகையில் கெடா மாநில இடாமான் நிறுவனத்துடன் இணைந்து கூலிம் சமூக நல அமைப்பு, கூலிம் மகளிர் இயக்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மறுசூழற்சிப் பொருட்களைப் பயன்படுத்தி கோலமிடும் போட்டி , வண்ணம் தீட்டும் போட்டி , மறுசூழற்சி வடிவமைப்பு போட்டிகளும் தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் செயல்முறை விளக்க காட்சியும் மாணவர்களுக்காக நடத்தப்பட்டது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இடாமான் நிறுவனத்தார் பரிசுகளை வழங்கினர்.








