சிரம்பான், ஆகஸ்ட்.05-
38 லட்சம் ரிங்கிட்டிற்கு நிலத்தை விற்பனை செய்வதற்கு பொய்யானத் தகவல்களை உள்ளடக்கிய நிலப்பட்டாவை பயன்படுத்தியதாக நம்பப்படும் நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த நில விற்பனை இடைத் தரகரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
இன்று காலையில் சிரம்பான் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சைஃபுல் சயோதி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த இடைத் தரகரை விசாரணைக்கு ஏதுவாக வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை 7 நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.
40 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேகப் பேர்வழி, விசாரணைக்காக நேற்று மாலை 5.30 மணிக்கு நெகிரி செம்பிலான் எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதாக அந்த ஆணையத்தின் தகவல்கள் கூறுகின்றன.








