ஜெம்போல், ஆகஸ்ட்.19-
நெகிரி செம்பிலான், ஜெம்போல், ஜாலான் பெசார் பாலோங் 16 இல், ஐந்து உடன்பிறப்புகள் வீடு திரும்பும் போது, அவர்கள் பயணம் செய்த காரை எதிர்த்திசையில் வந்த லோரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2.46 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் காரில் பயணம் செய்த உடன்பிறப்புகளில் வாகனத்தைச் செலுத்திய 18 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அதே வேளையில் அவரது 16 மற்றும் 11 வயதுடைய இரண்டு உடன்பிறப்புகள் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் பெரோடுவா கஞ்சில் காரும், இசுஸு லோரியும் சம்பந்தப்பட்டு இருந்ததாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் நோர்ஹிஷாம் முஸ்தஃபார் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கனத்த மழையில் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லோரி, சாலையை விட்டு விலகி எதிர்த்திசையில் நுழைந்து காரை மோதியதாக நம்பப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.








