நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக மாநில நிர்வாகம் முடங்க அனுமதிக்கக் கூடாது என அம்மாநில பிகேஆர் கட்சி தெரிவித்துள்ளது.
மாநில ஆட்சிக் குழு தொடர்பான அதிகாரத் தெளிவின்மை காரணமாக, அவசரமாக பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டிய விவகாரங்களில் தாமதம் ஏற்படக்கூடும் என மாநில பிகேஆர் கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில பிகேஆர் தலைவர் அமிருடின் ஹாருனின் முகநூல் பதிவில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், முதலீடுகள், வளர்ச்சித் திட்டங்கள், அனுமதிகள், நிலப் பரிமாற்றங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவையும் இந்த விவகாரத்தால் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை பாதிக்கப்படுவதுடன், நில உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டு, வேலைவாய்ப்புகள் மற்றும் வருமானமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் மாநில பிகேஆர் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, முடிவுகளை எடுக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது, சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரின் பொறுப்புகள் என்ன, மாநில நிர்வாகத்தின் தொடர்ச்சி எவ்வாறு உறுதி செய்யப்படும் என்பதில் தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களைக் காட்டிலும் பொதுநலனே முன்னுரிமை பெற வேண்டும் என்றும் மாநில பிகேஆர் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முடிவு கட்டும் வகையில், மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் நேற்று மாநில ஆட்சியாளர் யாங் டிபெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
கிட்டத்தட்ட 3 மணி நேரங்கள் நீடித்த இப்பேச்சுவார்களில், அவருடன் சுங்கை உஜோங் உண்டாங் முஹமட் ஃபாரிஸ் ஜோஹாரி, ரெம்பாவ் உண்டாங் ஹசான் அப் ஹாமிட் மற்றும் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் ஆகியோரும் உடன் இருந்தனர்.








