கோலாலம்பூர், அக்டோபர்.23-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராகத் தாம் தொடுத்துள்ள வழக்கில் தமக்கு நீதி கிடைப்பதற்குள் தாம் இறந்து விடக்கூடும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, ஷா ஆலாம் உயர் நீதின்றத்தில் தெரிவித்தார்.
வழக்கிற்கு தொடர்பு இல்லாத கேள்விகளை அன்வாரின் வழக்கறிஞர் ரஞ்சிட் சிங் கேட்கிறார். அந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தாம் பதில் சொல்ல வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 10, 15 ஆண்டுகள் ஆகலாம். தற்போது 100 வயது, அகவையை எட்டியுள்ள தமக்கு நீதி கிடைப்பதற்கு முன்பு தாம் இறந்து விடும் நிலை உள்ளது என்று துன் மகாதீர் தெரிவித்தார்.
தாமும், தனது பிள்ளைகளும் சம்பாதித்த பணம் குறித்து பேசியதாகக் கூறப்படும் அன்வாருக்கு எதிராகத் தாம் தொடுத்துள்ள வழக்கில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தாம் சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
தாம் ஒரு வழக்கறிஞர் இல்லை என்பது நன்கு தெரிந்திருந்தும், வழக்கறிஞர் ரஞ்சிட் சிங் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் தாம் பதில் அளிப்பதாக இல்லை என்று துன் மகாதீர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.








