மலேசியா முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.
குடும்ப வன்முறையைத் தடுப்பது, ஆரம்ப கட்டத்திலேயே தலையிடுவது மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உதவியைப் பெறுவதற்கான வழிகளை எளிதாக்குவது தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியான தாக்குதல்களை மட்டுமே குறிக்காது என்றும், உணர்ச்சி, உளவியல், பாலியல் மற்றும் பொருளாதார ரீதியான துன்புறுத்தல்களும் இதில் அடங்கும் என்றும் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருவரின் நடமாட்டம் மற்றும் உறவுகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட செயல்களும் குடும்ப வன்முறையாகும் என்றும், தற்போது இத்தகைய கட்டுப்பாடுகள் டிஜிட்டல் தளங்களிலும் தொடர்வதை அவர் சுட்டிக் காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், குடும்ப வன்முறை பல நேரங்களில் அதிகப்படியான கட்டுப்பாடு, மிரட்டல் அல்லது அவமதிப்பு போன்ற இயல்பானதாகத் தோன்றும் செயல்களிலிருந்தே தொடங்குவதாக தெரிவித்தார்.
எனவே, நிலைமை மோசமடைவதற்கு முன்பாகவே குடும்ப வன்முறையின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் கண்டு, சமூகத்தினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கருத்துகளை லிம் ஹுய் யிங் இன்று ஜோகூர் பாருவில் நடைபெற்ற குடும்ப வன்முறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.








