Sep 12, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

Share:

இந்தோனேசியாவின் மேற்கு களிமந்தான், பொந்தியானாக் பகுதியில் இணைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 30 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மலேசியா இது தொடர்பாக இந்தோனேசியாவுடன் இணைந்து விசாரணை மேற்கொள்ளும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த 30 பேரும் தனியாக செயல்பட்டார்களா? அல்லது திட்டமிட்ட ஒரு பெரிய மோசடி கும்பலின் ஒரு பகுதியாக இருந்தார்களா? என்பதை கண்டறிய மலேசிய அதிகாரிகள் விசாரணை நடத்துவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக இந்தோனேசிய அதிகாரிகள் மலேசிய போலீசாரைத் தொடர்புகொண்டு தேவையான தகவல்களை வழங்குவது வழக்கமான நடைமுறை என்றும் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த செவ்வாய்க்கிழமை அங்குள்ள தங்கும்விடுதி ஒன்றில் அறையில் வைத்து 30 மலேசியர்கள் மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் 30 பேரும் தனித்தனியாக பொந்தியானாக் விமான நிலையம், எந்திகோங் எல்லைப்பகுதி மற்றும் ஜகார்த்தா வழியாக இந்தோனேசியாவிற்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது.

இதற்காக பல்வேறு நுழைவு அனுமதிகளைப் பயன்படுத்திய அவர்கள், மூன்று வாரங்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை அங்கு தங்கியிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 30 மலேசியர்களும், இந்தோனேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related News