மலேசியப் பயனர்களை இலக்காகக் கொண்டு வணிக ரீதியிலான தேர்தல் தலையீட்டு பிரசாரம் நடத்த அந்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மலேசியத் தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி ஆய்வு செய்து வருகின்றது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க நிறுவனமான அந்ரோபிக்கின் அறிக்கையைத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.
எனினும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளில் எம்சிஎம்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
சுமார் 1,000 போலி X கணக்குகள், போலி செய்தி இணையதளம் மற்றும் உருவாக்கப்பட்ட உளவுத்துறை ஆவணங்கள் அடங்கிய வலையமைப்புடன் தொடர்புடைய கணக்கு ஒன்றை கண்டறிந்து நீக்கியதாக அந்ரோபிக் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் எம்சிஎம்சி கூடுதல் தகவல்களையும் விளக்கங்களையும் கோரியுள்ளது.
கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், தமது அதிகார வரம்பிற்குள் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவையானால் தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படப்படும் என்றும் எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.








